திவ்ய பிரபந்தம்

Home

T12 கனைத்து இளம்

திருப்பாவை 12

நாட்டில் இருந்த நாட்களோடு, காட்டில் இருந்த நாட்களோடும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் எம்பெருமான் இராமனை பின்தொடர்ந்து, நோக்கிக் கொண்டு திரியும், இளையபெருமாளை (லக்ஷ்மணன்) போன்று, கண்ணனை அன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொத்தமாக அவனையே பின் தொடர்ந்து, அவன் பக்கம் மிகவும் பரிவு பூண்டிருப்பான் ஓருவனுடைய, தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாள், ஓரு ஆய்ப்பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது.

நெடுநாட்களாக நின் வாசற் கடையை நாங்கள் பற்றிக் கொண்டு, முன் பொலாவி இராவணன் தன் முதுமதிள் இலங்கை செற்ற சீரிய சேவகத்தை எடுத்துப் பாடினாலும், நீ வாய் திறவாதே கிடந்து உறங்குகின்றாய், இப்படி உறங்கக்கூடுமோ, உன்னைக் காணாதே நாங்கள் அலமந்து தளர்ந்து இருக்கிறதை நீ அறிந்து வைத்தும் இப்படி உறங்குவது உரியதன்று, இதை உணர்ந்து வருவாய் என்கிறார்கள்.

இவள் தமையனுடைய செல்வத்தின் சிறப்பு முதலில் கூறப்படுகின்றது.  அவன் கண்ணனுடன்  கூடித் திரிபவன் ஆதலால், கறவைகளைக் காலந் தவறாது கறப்பதில்லை ;  அக்கறவைகள் வகுத்த காலத்தில் கறக்கப் படாததால், வாசலிலே நின்று குமுறி, தூரத்தில் கட்டப்பட்டு நின்றுள்ள கன்றின் மீது தனது பாசத்தை செலுத்தி அதனால், கன்று பால் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, முலை வழியே பால் சொரிந்து கொண்டே இருக்கும். அந்தப் பால் பெருக்கால் வீடு முழுவதும் வெள்ளம் ஆனாலும் அதனைச் செல்வம் என்று சொல்லி, இப்படி செல்வம் உடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை அழைக்கின்றனர்.

கனைத்தல் என்றால் குமுறுதல் என்ற பொருளில், இடைவெளி இன்றி தானம் செய்தலையே தொழிலாக உடைய தர்மவான்கள் ஒரு கணப் பொழுது தானம் செய்யாமல் இருந்தால், மனம் தளும்புமாறு போல, எம்பெருமான் அடியார் காரியங்களைச் செவ்வனே செய்யப் பெறாமல் போனால் எப்படி திருவுள்ளம் தளும்புமாறு போல, ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்குவது போல, பசுக்கள் கிரமமான காலத்தில் பால் கறக்கப்படா விட்டால் முலைக் கடுப்புற்றுக் கனைத்தல் இயல்பு என்று வருகிறது.

நின்று பால் சோர என்று சொல்லும் போது, முகில் மழை பொழிய நினைத்தால் கடலில் புகுந்து நீரை முகந்து கொண்டு வந்து பின்பு பொழிய வேணும்; இந்த கறவைகளுக்கு அப்படிபட்ட வருத்தம் இல்லை, நினைவே ஊற்றாகப் பால் சுரக்கும் ஆதலால், அந்த நினைவு மாறாமையால் திருமலையில் திருஅருவிகள் போன்று பால் மாறாதே பெருகும் என்கிறார். அர்ஜுனன் கேளாதே இருந்த போதும், கண்ணன் கீதையை கூறத் தொடங்கினால் போல உள்ளது கரவைகள் பால் சுரப்பது என்கிறார்.

“ஆழிமழைக்கண்ணா!” என்ற பாட்டில் பர்ஜந்ய தேவதைக்கு அருளிப் பாடிட்டு மழை பெய்ய நியமித்தார்கள் ஆதலால், அக்கட்டளையின்படி அவன் பெய்யும் மழை தலையிலே விழுமாறு இவளது வீட்டு வாசலை பற்றி சொல்வது, “பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி” என்பது. கீழே கரவைகள் பால் சுரந்து ஓடி கொண்டு நனைத்து இல்லம் சேறாக்கும் என்கிறார்.

தென் இலங்கை கோமானை, என்பதை பற்றி சொல்லும் போது, திருவடி (ஹனுமான்) மதித்த ஐஸ்வர்யம் என்றும், ஒரு அம்பாலே இராவணனின் தலை அறுக்காமல், படையை கொன்று, புத்திர, பௌத்திரர்களை கொன்று, ஆயுதங்களை முறித்து, அரக்கர் கோன் என்ற பெருமைகளை அழித்ததை சொல்கிறார்.

இராமன் இராவணனோடு போர் புரியும் போது அவன் ஆயுதங்களை இழந்து நிற்கும் போது, இரக்கமுற்று, “போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடம் சென்று சிறிது தேறி நாளை போர்க்கு வா,” என்று அனுமதி தந்து, தானே போகவிட்டு அருளினது முதலிய பல குணங்களினால் “மனத்துக்கு இனியானை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.  கண்ணன் பெண்களைப் படுத்தும் பாடுகளை நினைத்தால், அவன் மனத்துக்கு இனியன் அல்லன் போலும். பெண்களை விட்டு ஓடி, அவர்களை துடிக்க விட்டு, பின்பு இரக்கம் இன்றி, அவர்களின் துடிப்பு கண்டு, கண்ணீர் விடாமல் இருக்கும் கண்ணன் என்கிறார். ஆனால் எதிரிகள் படும் துன்பத்திற்கு கூட இரக்கப் படும் இராமன் என்கிறார்.

இனித்தாய் எழுந்திராய் என்பதற்கு எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திராவிட்டாலும், மனத்துக்கு இனியானுடைய பாட்டுக்களைக் கேட்டாகிலும் உணர்ந்து வா என்கிறார்கள்.

ஈதென்ன பேருறக்கம் என்பதற்கு உறக்கம் இருவகைப்படும் என்றும், அவை லௌகிகமும் வைதிகமும் என்று சொல்லி, இவை இரண்டும் இல்லாமல் இருக்கும் இன்னொரு நித்திரையை சொல்கிறார்.   தமோ குணத்தின் வெளிப்பாட்டினால் உறங்குவது ஸம்ஸாரிகளின் உறக்கம், லௌகிக நித்திரை. அனைத்து உலகங்களின் காவலைச் சிந்தனை செய்து கொண்டு, உறங்குவான் போல் யோகு செய்யும், எம்பெருமானுடைய நித்திரை வைதிக நித்திரை ஆகும்.  இவ்விரு வகையிலும் சேராதே இருப்பதொரு நித்திரையாய் இருப்பது உன் உறக்கம் என்கிறார்கள்.

அனைத்து இல்லத்தாரும் அறிந்து” என்பதற்கு இரண்டு வகையாக பொருள் உரைக்கிறார். நீ மற்றவர்களுடைய வளர்ச்சியையே பலனாக உடையவன் ஆதலால், ‘இந்த ஆய்ப்பாடியிலுள்ள பெண்களில் ஒருத்தி தப்பாமல் அனைத்து இல்லத்தாரும் உணர்ந்து வரவேண்டும்’ என நினைத்துக் கிடக்கிறார். அப்படியே அனைத்து இல்லத்தாரும் அறிந்து வந்தாயிற்று; இனி நீ உணர்ந்துவா என்கிறார்கள், என்பது ஒரு கருத்து;

இந்த ஆய்ப்பாடியிலுள்ள பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து உன் மாளிகை வாசலில் நின்று கூப்பிட, நீ சிறிது பொழுது உணராமல் கிடக்க, இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறிய வேண்டும் என்று கிடந்ததால், அதுவும் அறிந்தாயிற்று; இனி உணர்ந்துவா, என்கிறார்கள் என்பது மற்றோர் கருத்து. 

பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது என்பார்கள். தங்காய் என்று அழைப்பது இவர்க்கு நன்கு பொருந்தும். உலகில் தங்கையென்று ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும் தமக்கையென்று மூதேவியையும் வழங்குவர்கள். ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாமரை மலரில் பிறந்தவள்.  ‘வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தாள் வாழியே’ என்கிறபடியே பொய்கை யாழ்வாரும் தாமரைப் பூவில் தோன்றியவர். இந்த ஓற்றுமைநயம் பற்றி தங்காய் என விளிக்கத் தகுதி உடையார் ஆழ்வார். 

நனைத் தில்லஞ் சேறாக்கும்” என்ற விசேடணமும் இவர்க்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.  ராவண வதம் முடிந்த பிறகு, திருவயோத்திக்கு மீண்டும் எழுந்து அருள, பெருமாளை (இராமன்) நோக்கி, பரத்வாஜ மஹர்ஷி, பரதாழ்வான் சேறு பூசப் பெற்றிருப்பதாகச் சொல்லப்பட்டதன் கருத்து யாது எனில், இரவும் பகலும் எப்போதும் அழுது அழுது நினைத்தில்லம் சேறாக்கினன் என்றபடி.  பொய்கை யாழ்வாரும் “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று தாமே பேசினபடியே அழுதவராதலால் நனைத்தில்லஞ் சேறாக்கினார்.

கனைத்து என்பது முதன் முதலாகப் பேசத் தொடங்கும் போது கனைப்பது இயல்பு.  பொய்கையார்க்கு முன்னம் பேசினவர்கள் யாருமில்லை. இவரே முதல் ஆழ்வார், முதன் முதலாகப் பேசத் தொடங்கினார் என்பது விளங்கும்.

இந்த பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை எல்லாம் சொல்லியாயிற்று. ஸ்ரீ மதுர கவி, ஆண்டாள் ஆகிய இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் சொல்வார்கள். நற்செல்வன் தங்காய் என்றது நற்செல்வன் தங்கையே என்ற பொருளில் நற்செல்வன் தன்னுடைய கையாக இருப்பவனே என்றபடி, இங்கு நம்மாழ்வாரை, நற்செல்வன் என்றும், மதுரகவிகள் அவருடைய திருவாய்மொழியை வெளி உலகுக்கு எடுத்து சென்றவர் ஆதலால் இந்த நற்செல்வன் தங்காய் என்பது மதுர கவிகட்குப் பொருந்தும்.

இனி நற்செல்வனென்று எம்பெருமானாரைச் சொல்லி, அவருடைய தங்கையென்று ஆண்டாளையும் சொல்வதில் ஒரு குறையும் இல்லை. ஆண்டாள் தன்னைத்தானே உணர்த்திக் கொள்ளுகையும் பொருந்தும்.

Leave a comment