திவ்ய பிரபந்தம்

Home

T9 தூமணி மாடத்து

திருப்பாவை 9

கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும் ஒருத்தியை இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். வெளியே இருப்பவர்கள் இளைய பெருமாளை (லக்ஷ்மணன்) போலவும், முக்தி அடைந்தவர்கள் போலவும், உள்ளே இருப்பவள், நித்ய சித்தர் போலவும் மைத்துனமை உறவை உடைய ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் மணம் வீச பெற்ற நன்மணி மாடத்தில் மெல்லணை மேல் கண் துயில்கின்ற மாமான் மகளை நோக்கி “மணிக்கதவம் தாள் திறவாய்” என்று வெளியே நிற்பவர்கள் சொல்ல, அவள் அதனைக் கேட்டும் மறுமொழி ஒன்றும் கூறாதவளாய்க் கிடக்க, அப்படி கிடப்பதைக் கண்ட அவள் தாயார் “இத்தனை பெண்பிள்ளைகள் வருந்தி வாசலிலே நின்று துவள, இவள் ஒரு பேச்சும் பேசாதே உறங்குவது என்ன நீதி!’ என்று நெஞ்சில் கொண்ட இரக்கம் முகத்திலே தோன்றும்படி இருப்பதை பார்த்த ஆச்சியர்கள், ‘மாமீர்! அவள் ஓருத்தி எங்கள் திரளில் சேராமையாலே நாங்கள் படும்பாட்டை பாருங்கள்; உமது மகளைச் சிறிது உணர்த்தல் ஆகாதா, நாங்கள் நெடு நேரமாக நின்று கூவும் போதும், இவள் மாற்றம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறாள்; இவள் ஊமையா, செவிடா, பெரிய உறக்கம் பிடித்தவளா, அன்றி, இவள் எழுந்து இருக்கக் கூடாது என்று யாரேனும் படுக்கையில் காவலில் இடபட்டு இருக்கிறாளா அல்லது மந்திரத்தினால் ஸர்ப்பத்தைத் கட்டுவது போல், இவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதபடி யாரேனும் செய்து விட்டார்களா;  எங்களுக்கு என்ன என்று தெரியவில்லை. இதனைக் கேட்ட தாயார் ‘நீங்கள் அப்படி ஒன்றும் சந்தேகிக்க வேண்டாம். பகவான் நாமங்களை சொல்ல தொடங்கினீர்கள் ஆனால், அவள் தன்னடையே உணர்ந்து எழுந்து வருவள்’ என்று சொல்ல, அப்படியே நாங்கள் பல பகவான் நாமங்கள் சொல்லியும், இன்னும் யாம் என்ன செய்யவேண்டும்’ என்கிறார்கள்.

Leave a comment