திவ்ய பிரபந்தம்

Home

T6 புள்ளும் சிலம்பின

திருப்பாவை 6

அர்ஜுனன் பண்ணிய சத்தியத்தை கண்ணன் செய்து முடித்ததைபோல், இவள் செய்த விரதத்திற்காக பஞ்சலக்ஷம்குடியில் உள்ள பெண்டிர் நாங்களும் மார்கழி நீராடுவோம், நம்முடைய விரோதிகள் போகும் என்று புறப்பட, சிலர் வராது இன்னும் உறங்கி கொண்டு இருக்க, அவர்களை எழுப்பி கொண்டு போவோம் என்றும், எல்லோருடன் சேர்ந்து பகவத் கைங்கர்யம் செய்வதில் மகிழ்ச்சி கொண்ட இவர்கள் இழவு பொறுக்க மாட்டாமைக்கும், சிறந்தது என்று கிடைக்கும் போது, தனியே புஜிக்க மாட்டாமையாலும், பகவத் சம்பந்ததைவிட, பாகவதர் சம்பந்தம் சரியானது ஆனதாலும், பகவத் விஷயம் தனியே அனுபவிக்கும் விஷயம் இல்லாததாலும், உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்கள்.

இந்த பாட்டு முதல், “எல்லேயிளங்கிளியே” என்ற 15ம் பாட்டு வரையில் பத்துப் பாசுரங்களாலே, பாவை நோன்பு நோற்க, மற்ற பெண்களை எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது.  கிருஷ்ண அநுபவத்திற்குப் பிரதான உபகரணமான, அவன் மீது ஆசையும், ஏகாந்தமான காலமும், ஆயர்குல பெரியவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியில் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்த நிலையில், அவரவர் தனித்தனியே அநுபவித்து இருக்கலாமே, ஒருவரை ஒருவர் சென்று ஏன் எழுப்ப வேண்டும் என்றால், பெரும் காற்றில் சிக்கியவர்கள், துணை இருந்தால், தப்பிக்க வழி இருப்பது போலம், “காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்” என்றும், “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்து ஆட் செய்மின்” என்று ஆழ்வார்கள் அருளிச் செய்தபடி, இவர்கள் அஞ்சித் துணை கூட்டிக் கொள்வதற்காக ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள். சுவை மிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கது அல்லாமையால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்க ஆசை கொள்கின்றனர்.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி எம்பெருமானை பாகவதர்களோடு (அடியவர்களோடு) அணுக வேண்டும் என்பதால் இப்படி எல்லோரையும் கூட்டிக்கொண்டு ஆண்டாள் அனுஷ்டித்து காட்டுகிறாள். கண்ணனது திவ்ய சேஷ்டிதங்களும் கல்யாண குணங்களும் சிலரை நஞ்சுண்டாரைப் போலே மயங்கப் பண்ணும்; சிலரை இருந்த இடத்தில் இருக்க வொட்டாதே துடிக்கப் பண்ணும். அதனால் ஒரு சிலர் எழுப்ப, ஒரு சிலர் உறங்குகிறார்கள். ஆசைக்கு இரண்டு பிரிவினருக்கும் குறைவு இல்லை, 

பெண் பிள்ளைகள், பொழுது விடிந்தமையை அறியாமல் கிடந்து உறங்குகின்ற பெண் ஓருத்தியின் மாளிகை வாசலில் நின்று ‘பிள்ளாய்! விடிந்த பின்பும் இப்படி உறங்கலாகுமோ?’ என்று சொல்ல, அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தமைக்கு அடையாளம் ஏது’ என்று கேட்க, “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று ஓர் அடையாளம் கூறுகின்றனர்.  பறவைகள், மார்கழி நீராட வேண்டும் என்ற எந்த அவசரமும் இன்றி, வைகலில் எழுந்திருப்பதை பற்றிய அறிவும் இல்லாமல், காலம் உணர்த்துவதால், இதுவே விடிவுக்கு ஏற்ற அடையாளம் என்பது இவர்களின் கருத்து.

அவள், ‘உங்களூரிலுள்ள பறவைகளின் உணர்த்தி, விடிவுக்கு அடையாளமாக எடுத்து கொள்ள மாட்டாது, அதனைவிட்டு வேறு அடையாளம் கூறு என்கிறாள். திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் செவியில் பட்டதில்லையோ, என்கிறார்கள்.

கண்ணனுடைய குணங்களில் ஈடுபட்டிருப்பார் உறையுமிடமான திருவாய்ப்பாடியில் கோயில் உண்டோ என்று கேட்டு, திருவயோத்தியில் சக்ரவர்த்தித் திருமகனாருடைய குணங்களிலே தோற்று நிற்கும் பிராட்டியுடன் கூடிப் பெரியபெருமாளை சேவித்ததாக இராமாயணத்தில் உள்ளது, அது போல இங்கேயும் ஒரு திருக்கோயில் உண்டு எனலாம்.

புள் அரையன் என்பதில், புள் என்று பெரிய திருவடியை (கருடன்) சொல்கிறார். அரையன் என்று அதற்கு தலைவனான எம்பெருமானைச் சொல்கிறார். இப்படி பெரிய திருவடியை முன்னிட்டு எம்பெருமானை நிரூபிக்கிறது. எம்பெருமானை அடியார் பக்கலில் கொண்டு வந்து சேர்ப்பவன் கருடனாகையாலே அவன் உகப்புத் தோன்ற அவனை முன்னிட்டு நிரூபிக்கிறார்.

இனி இந்த அடையாளத்துக்கும், உறங்குபவள் மறுப்புக் கூறுகின்றாள். “வெள்ளை விளிசங்கின் பேரரவம் என்றீர்கள்; சங்குக்கு வெண்மை நிறம் இயற்கை ஆகையால், வெள்ளை என்ற அடைமொழி தேவை இல்லை; விளிசங்கு என்கிறீர்கள்; இது பொழுது விடிவை உணர்த்தவல்ல சங்கன்று என்றார்கள்; பேரரவம் என்கிறீர்கள்; பெருத்த ஒலியாகில் உங்களைப் போலே எனக்கும் செவியில் விழுந்து இருக்க வேண்டும். அது படாததால், நீங்கள் சொல்வதெல்லாம் பொழுது விடிவுக்கு அடையாளமாக மாட்டாது” என்றனள்.

கேட்டிலையோ என்பது, இப்படிப்பட்ட பேரொலியும் செவியில் விழாதபடி நீ உள்ளே செய்யும் செய்கை என்ன என்று கேட்கிறார்கள். பிள்ளாய் என்பது, பேதைமை யுடையவளே! என்ற பொருளில் வரும். இது பாகவதர்களிடையே ஏற்படும் வித்யாசத்தினால் அல்ல, பகவத் பாகவத விஷயங்களில் இருந்து விருப்பம் அற்றிருப்பது பேதைமையின் வெளிப்பாடு அன்றோ என்று வெளியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

அது கேட்ட அவள், “நீங்கள் சொன்னபடியே நான் பிள்ளையாகிறேன் ; காதுக்கு இனிமையான சில பேச்சுக்களைச் சொல்லுங்கள்” என்று கேட்க பேய்முலை நஞ்சுண்டு என்று தொடங்கி சொல்கிறார்கள். பூதனை என்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அந்த அரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவள் உயிரையும் உறிஞ்சி அவள் இரைச்சலிட்டு உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தது செய்தனன் என்பது பேய் முலை நஞ்சுண்ட வரலாறு.

நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புரத்திலே தொட்டிலிற் பள்ளி கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், அந்த சகடத்தில் கம்சனால் ஏவப்பட்ட அசுரன் ஓருவன் ஆவேசித்து, தன் மேலே விழுந்து, தன்னைக் கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்காக அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்து அருள, அந்த உதைபட்ட மாத்திரத்தில் அந்த சகடம் கீழே விழுந்து, அசுரனுடன் அழிந்தது என்பது கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சின வரலாறு.

இந்த இரண்டு சரித்திரங்களையும் இங்கு கூறியது உள்ளே உறங்குபவள் அஞ்சி எழுந்தோடி வருதற்காக ஆகும்.  

திருப்பாற்கடல், அவதாரங்களுக்கு அடிக்கிழங்கு ஆவதால் “வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை” எனப்பட்டது. உழவர், விதையை நீரீலே சேர்ப்பது போல், உலகங்களுக்கு எல்லாம் விதை போன்ற எம்பெருமான், காரிய வர்க்கத்திற்கு எல்லாம் காரணமாய் இருக்கிற எம்பெருமான், நீரீலே இருந்தார் என்பது ரசிக்க தக்கது.

முனிவர்கள் என்பவர்கள் மனன மற்றும் குண சீலர்கள்; யோகிகள் என்பவர்கள் கைங்கர்ய நிஷ்ட்டர்கள்.  ஸ்ரீ பரதாழ்வானையும் இளைய பெருமாளையும் (லக்ஷ்மணன்), முறையே இரண்டுக்கும் ஒப்பாக கொள்ளலாம். இந்த இரண்டு வர்க்கத்தினரும் திருவாய்பாடியில் உள்ளனரா என்று விசாரித்து, கண்ணன் இங்கே திருஅவதாரம் செய்யும் போது, ஊரில் உள்ள பசு நிரை கொட்டில்களிலும், பாண்டவர்கள் இருக்கின்ற பணி கொட்டில்களிலும் இருக்கிறார்கள்.

மெள்ள எழுந்து என்று சொன்னது, கர்ப்பிணி ஸ்திரீகள், வயிற்றினுள் இருக்கும் குழந்தைக்கு நோவு வராதபடி மெள்ள எழுந்திருப்பது போலவும், மகனை நலியுமாறு இரணியனால் எவப்பட்ட கிங்கரர்களினால் ப்ரஹலாதாழ்வான் மலை சிகரத்தில் இருந்து தள்ளும் போது, ‘பார்த்து அருள், பார்த்து அருள்” என்று அந்தர்யாமியான ஸர்வேச்வரனைப் பிடித்துக் கொண்டால் போலவும், எம்பெருமானை உள்ளத்துக் கொண்ட முனிவர்களும் யோகிகளும் அந்த எம்பெருமான் நிலைமாறாதபடி எழுந்திருப்பார் என்று கொள்ளலாம். உள்ளம் புகுந்து என்று சொன்னது, கிருஷ்ண விரக தாபத்தாலே காய்ந்து பிளந்து இருந்து நெஞ்சு, ஒரு நீர் பாய்ச்சினார் போல பதம்ஆனதை போல உள்ளது என்கிறார்.

உஷத் (அதிகாலையில்) காலத்தை உணரும் போது ‘ஹரி ஹரி’ என்ற அநுஸந்தானத்துடன் உணர வேண்டும் என்பது விதியாதலால், அதன்படி அவர்கள் (முனிவர்களும் யோகிகளும்) அத்தனை பேரும் திரண்டு அநுஸந்தித்த ஹரி நாமத்தின் பேரொலி இங்கு எங்கும் பரவிச் செல்ல, அது கேட்டு நாங்கள் உணர்ந்து வந்தோம்; இது பொழுது விடிவதற்கு ஏற்ற அடையாளம்; உடனே எழுந்து எங்களுடன் கூடப் பெறாய் என்று சொன்னார்கள்.

இந்த பாசுரம், பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம் என்றும் சொல்வார் உண்டு. புள்ளரையன் என்று பெரிய திருவடியின் பெயர் வந்து இருப்பதில், பெரியாழ்வார் பெரிய திருவடியின் அம்சமாகத் திரு அவதாரம் செய்தவர் என்பது கவனிக்க தக்கது. “வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள் ‘விஷ்ணுசித்தர்’ என்னும் திருநாமமும் அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்” “பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் அர்த்தமும் அந்தர்யாமியை சொல்வது நன்கு விளங்கும்.

Leave a comment