திவ்ய பிரபந்தம்

Home

T5 மாயனை மன்னு வடமதுரை

திருப்பாவை 5

‘நாராயணா’ என்று முதல் பாட்டில் பரமபதம் சொல்லப் பட்டது. திரு அவதாரங்களுக்கு அர்த்தமான திருப்பாற்கடலில் கண்வளர்ந்து இருப்பது இரண்டாம் பாட்டில் சொல்லப் பட்டது. இந்திரன் குறை தீர, ஸ்ரீ வாமனனாக திரு அவதாரம் செய்து, ஒரு நாடாக, யாரிடமும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் எந்த வித்தியாசமும் பாராமல் திருவடிகளை கொண்டு தீண்டியது மூன்றாம் பாட்டில் சொல்லப்பட்டது. இந்த பாட்டில் கிருஷ்ணனாய் திருஅவதாரம் செய்து, எளியவனாய், ஒரு அளவும் இல்லாமல், எல்லோருக்கும் கட்டவும், அடிக்கவும் இடம் கொடுத்து, ஒரு ஊருக்காக தன்னை முற்றுமாய் கொடுத்ததை சொல்கிறது.

வாமனனாக அவதரித்து எல்லோருடைய விரோதிகளையும் போக்கியதை நினைத்து, இதனை நாம் இழந்து விட்டோம் என்று பேசிக்கொண்டு இருப்பதில் ஒரு பயனும் இல்லை என்றும், நமக்கு என்று கிடைத்த வாய்ப்பை கொண்டு பகவத் அனுபவத்தை பண்ணாமல் இருந்தால், இவையும் நமக்கு தன்னடையே போய்விடும், ஆகையால் நம்முடைய குற்றத்தைப் பார்த்து விலக வேண்டாம். மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனை துறைவனை, ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை, தாயை கூடல் விளக்கம் செய்த தாமோதரனை, செப்பு, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்கிறார்கள்.

இராமபிரானை முடிசூட்டுதற்காகச் தசரத சக்கரவர்த்தி பாரித்தான்; வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தருமம் எனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்; பிராட்டியோடே கூடிப் பெரியபெருமாளைத் தொழுது இறைஞ்சினான்; நாடு எங்கும் இந்த அபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களா சாஸநம் செய்தது. இப்படி இருந்தும், அந்த மங்கள காரியத்திற்கும் இடையூறு வந்தது. ஆனாலும் சக்கரவர்த்தி திருமகன், விபிஷணனுக்கும் சுக்ரீவனுக்கும் முடி சூட்டியவர் ஆயிற்றே.

நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நன்றாக நிறைவேறுமோ’ என்று சில ஆச்சியர் கேட்க, நாம் பகவந் நாம ஸங்கீர்த்தனம் பண்ணவே பாவங்கள் அனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போல ஓழியுமாதலால், அந்த திரு நாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவது என்று அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

ஸர்வேச்வரன் பரமபத நிலையில் இருந்து திருவாய்ப்பாடியில் கண்ணனாய் அவதரித்துக் கோவலர்க்கும் கோக்களுக்கும் தான் எளியனாய், வெண்ணெய் களவு காண்பது, மாதரைக் களவு காண்பதாய்ச் செய்த ஆச்சரியச் செயல்களின் அளவின்மையை நினைத்து “மாயனை” என்றார். நித்யசூரிகளும் நேர் நின்று பார்க்கவொண்ணாத அளவில் திடீரென்று திருஅவதாரம் செய்ததையும் இந்த மாயனை சொல்கிறது. நம்மாழ்வார் கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்து ‘எத்திறம்’ என்றதை போல, இவர்கள் வைகுந்தநாதனின் குணங்களை எண்ணி, ‘எத்திறம்’ என்கிறார்கள்.

திருவடமதுரையில் ஸித்தாச்ரமத்தில் ஸ்ரீவாமனனாய்த் தவம் புரிந்து இருந்தமையாலும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படையெடுத்துப் பகை அறுத்துத் தனக்குப் படைவீடாகப் பெற்று, நெடுநாள் அரசாண்டமையாலும், கிருஷ்ணனாய் வந்து பிறந்தமையாலும், மதுரைக்குப் பகவத் ஸம்பந்தம் நித்யம் இருக்கும் தன்மையை முன்னிட்டு மன்னு என்று வடமதுரைக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.

மைந்தன் என்றால் மிடுக்கை யுடையவன்; “தந்தை காலிற் பெரு விலங்கு தாள விழ நள்ளிரவில், வந்த எந்தை” (பெரிய திருமொழி 7.5.1) என்றபடி கண்ணன் தான் பிறக்கும் போதே வஸுதேவ மற்றும் தேவகியின் காலில் விலங்கு முறியுமாறு பிறந்த மிடுக்கைக் கூறுகிறது. பருவம் நிரம்புவதற்கு முன்னே கம்சனை கொன்ற மிடுக்கைக் கூறுகிறது. மைந்தன் என்று பிள்ளையாகவும், வட மதுரை மன்னன் என்று ராஜாவாகவும் தோன்றினான் என்று கூறுகிறார்.

கண்ணன் திருமதுரையிற் பிறந்து வஸுதேவன் கம்ஸனிடத்துள்ள அச்சத்தினால் அந்த பிள்ளையைத் திருவாய்ப்பாடியில் ஒளித்து வளர்க்கக் கருதி , எழுந்தருளிவித்துக் கொண்டு செல்ல, இடையில் பெரு வெள்ளமாய்ப் பெருகிய யமுனை ஆறு, தன்னை முழந்தாள் அளவிற்கு வற்றி, வழி தந்ததால், அந்த ஆற்றிற்கு ஒப்புயர்வற்ற தூய்மையாகக் கருதித் தூய பெருநீர் என விசேஷிக்கப்பட்டது. ஸீதா பிராட்டி சரணம் புகுந்தும், ராவண பயத்தாலே, அஞ்சி இருந்த கோதாவரி போல இல்லாமல், கம்ஸன் மாளிகை நிழல் கீழே, யமுனை நதி வற்றிக் கொடுத்ததே தூய்மையாம்.  வைகுந்தத்தில் இருந்து வந்து அவதரிக்கைக்கு இந்த ஊர் உண்டானது போல், விராஜா நதி போல இருக்கும் ஆறு ஆனதால் தூய பெரு நீர் ஆனது.

பெருநீர் என்று சொன்னது, அஞ்சுலக்ஷம் குடியில் பெண்களும் கண்ணனும் கூடி ஜலக்ரீடை பண்ணுவதற்கும், பெண்கள் விரஹதாபம் தீரக் குளிக்கைக்கும் உரிய நீரை உடையதை சொல்கிறது. பெருமை பொருந்திய நீரையுடைய என்றும் கொள்ளலாம். “வடமதுரை மைந்தனை” என்று ஊரும், “தாமோதரனை” என்று பேரும், “யமுனைத் துறைவனை” என்று ஆறும் கூறப்பட்டன. கண்ணனுக்கு யமுனையாறு பெண்கள் படும் துறையாகையால் “யமுனைத் துறைவனை” எனப்பட்டது.

“ஆயர் குலத்தினிற் பிறந்த” என்று சொல்லாமல், என்னாது, “தோன்றும்” என்றது, கீழ்த்திசையில் உதிக்கின்ற ஆதித்தியனுக்கு அந்த திசையில் பற்று உண்டாவது என்ற கருத்துத் தோன்றக் கூறினான். முலைப்பால் குடித்து அழுத இடமே பிறந்த இடம் ஆதலால், வடமதுரையில் பிறந்த கண்ணனை ஆயர் குலத்தினில் பிறந்தவனாகக் கூறுகிறார். அது மட்டுமின்றி, மதுரையில் மறைந்து, ஆய்க்குலத்தில் வெளிப்பட்டதினால் ‘தோன்றும்’ என்று சொன்னார். பரமபதத்தைவிட தன் குணங்கள் அதிகம் பிரகாசிக்கும் இடம் என்றதால், ‘தோன்றும்‘ என்று சொன்னார்.

தாயை குடல் விளக்கம் செய்த என்று சொன்னதன் மூலம், தன் வயிற்றில் தழும்பாலே யசோதையை விளங்க செய்தவன் என்று சொல்கிறார். அவனுடைய பந்தமும் அவனது அநுக்கிரத்தாலே என்பதால் அவனாலும் அறுக்க வொண்ணாது என்றும் அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் சொல்கிறார். அவனுடைய பந்தத்தை அனுசந்திக்க நம் சம்சார பந்தம் அறுப்பட்டு முக்தி அடைவோம் என்கிறார்.

தூயோமாய்” என்பது எம்பெருமானிடத்தில் ஸம்பந்த உணர்ச்சிக்கு மேற்பட வேறொரு சுத்தியும் ஆத்மாவுக்கு இல்லாததால் அப்படி கூறப் பட்டது. கூறப்படுகின்றது.

தூமலர்கள் என்று சொன்னது ஒரு பிரயோஜனத்தை விரும்பி இடப்பட்டது அல்ல என்பதால் என்கிறார். தொழுது, பாடி, சிந்திக்க என்று மனமொழி மெய்களாகிற முக்கரணங்களினுடையவும் வியாபாரங்கள் கூறப்பட்டன. இவன் சமர்ப்பிக்கப்படும் பொருளை பார்ப்பதில்லை, சமர்பிப்பவனின் நெஞ்சின் ஈரத்தை மட்டுமே பார்ப்பவன்.

எம்பெருமானை அடிபணிவதற்கு முன்பு செய்யப்பட்ட பிழைகள் போய பிழை; (பூர்வாகம்).  அடிபணிந்த பின்னர் பிரகிருதி வாஸனையினால் புத்தி பூர்வமாகச் செய்யும் பிழைகள், புகுதருவான் என்றது; (உத்தரவாகம்). இவை இரண்டும் தீயில் இட்ட தூசு போல உருத் தெரியாமல் ஒழியும் என்று பலன் கூறினார்.

‘நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க, இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நிறைவேறுமோ?’ என்று வினவியவளை நோக்கியது, செப்பு என்று சொல்லி முடிக்கிறார்.

Leave a comment