திவ்ய பிரபந்தம்

Home

T4 ஆழி மழை கண்ணா

திருப்பாவை 4

ஆயர் சிறுமியர், தாம், மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இப்படி சிந்தித்து கொண்டு இருக்க, மழைக்கு நிர்வாகனனான பர்ஜயன் (மேகம்), பகவத் காரியம் செய்யும் அவர்களுக்கு, சிறிது உதவி செய்தால் தனக்கும் ஸ்வரூப லாபம் கிடைக்கும் என்று எண்ணி, அவர்களிடம், ‘நான் உங்களுக்காக செய்ய வேண்டியவைகளை செய்ய அடியேன் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை நியமிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்து நிற்க, ஆய்ச்சிகள், ‘பெண்கள் நோற்றது என்ன, மழை பெய்தது எப்படி’ என்று அனைவரும் நன்றாக கொண்டாடும்படி மழை பெய்ய வேண்டும்” என்று அவன் செய்ய வேண்டு கைங்கரியத்தை இந்த பாட்டால் சொல்கின்றார்.

பர்ஜந்யனே ! உனது ஔதார்யத்தை நீ எள்ளளவும் ஒளிக்க கூடாது, கடலினுள் புகுந்து அங்குள்ள நீரை முற்றும் முகந்து கொண்டு, பெரு முழக்கம் செய்து, வானத்தின் மீதேறி, எம்பெருமானது திருமேனி போலக் கருமை பூண்டு, அவனது வலங்கை ஆழி போல் மின்னி, இடக் கைச் சங்கம் போல் அதிர்ந்து, ஸ்ரீ சார்ங்கம் சர மழை பொழியுமாறு போல, நாடெங்கும் நீரைச்சொரிந்து, எமது மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே நடத்த வேண்டும் என்பது இவர்கள் கட்டளையிடும் பரிசு.

“ஆழிமழைக் கண்ணா!” என்று அவனுக்கு அதிகரித்த காரியத்தை முன்னிட்டு அழைக்கின்றனர். எம்பெருமான், காத்தல் என்ற தொழிலை தனக்கு வைத்துக்கொண்டார் போல, அவனது நீர்மைக்குப் பொருந்த, எல்லாரையும் குளிர நோக்கும் காரியத்தில் பர்ஜன்யன் நியமிக்கப் பட்டதை புகழ்கின்றார். ஆழி மழை என்று சொன்னதால், மண்டல மேகமாக்கி, அதற்கும் நிர்வாகனனே என்று சொல்கிறார்.

ஒன்று நீ கை கரவேல்‘ என்று சொன்னது, உன் கொடையில் ஒன்றும் குறையாமல் இருக்க வேணும் என்று வேண்டுவதை சொல்வது.

மேகத்தின் முழக்கம் மகிழ்ச்சிக்கு உறுப்பாதலால் ஆர்த்து என்று அம்முழக்கத்தை வேண்டுகின்றனர்.  அனுமன் பிராட்டியைக் கண்ட களிப்பின் மிகுதியால் ஆரவாரித்துக் கொண்டு திரும்பி வந்தபோது கரையில் இருந்த வானர வீரர்களை மகிழ்வித்ததை போல நீயும் ஆரவாரத்தினால் எம்மை மகிழ்விக்க வேண்டும் என்று வேண்டுவதை சொல்வது.

ஏறி என்றதனால், முகம் தோன்றாமல் காரியம் செய்யும் எம்பெருமானைப் போலன்றி, ஆகாயம் எல்லாம் உன் வடிவைப் பரப்பிக் காட்டிக் காரியம் செய்ய வேண்டும் என்று வேண்டுவது.

ஊழிமுதல்வன் என்று கூறியதில், ஊழி என்பது காலத்திற்கு பெயர்; “உருவம்போல் மெய்கறுத்து” என்று சொன்னது நெடுங்காலமாக தன் திருவயிற்றில் வைத்து இருந்து, அவர்களுடன் கலக்க வேண்டும் என்ற திருவுள்ளத்தாலே, உலகம் படைக்கும் போது, தன் நிறம் மிளிர்வதை சொல்கிறார் என்று கொள்ளலாம். படைக்கும் போது, எல்லாவற்றையும் படைக்க வேண்டுமே என்று திருவுள்ளம் கொள்ளும்போது, கருவடைந்த பயிர் போல, அவர் நிறமும் கறுத்து இருக்கும், அதே போல மேகமாகிய நீயும் கறுத்து இரு சொல்கிறார். அந்த எம்பெருமானது திருமேனியின் நிறத்தை மாத்திரம் நீ ஏறிட்டுக் கொள்ளலாம், அதனை தவிர,மற்றது எல்லாம் அரிது என்பது கருத்து. திருவரங்கம் பெரிய கோயிலில் சிறிய திருவத்யயன உத்ஸவத்திற் கடைசி நாள் இரவு ஸ்ரீரங்கநாதன், நாச்சியார் திருக்கோலம் பூண்டு, ஸேவை ஸாதித்தருள, ஸ்ரீ பட்டர் ஸேவித்துப் பெருமானை நோக்கி ‘நாச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்டதே தவிர அவள் போல் விழி விழிக்க உன்னால் ஆகாதே’ என்று உரைத்தருளின ஐதிஹயத்தை நினைவில் கொள்ளலாம்.

கண்ணனது திருமேனி நிறத்தைக் காண விருப்பமுடைய இவர்கள் அதன் போலியையாவது கண்டு களிப்போம் என்னும் ஆசையால், “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” என்ற கருத்தும் பொருத்தமே.

பாழி அம் தோள் என்றது வலிமையும் அழகும் பொருந்திய தோள் என்பதாகும். எனவே, ரக்ஷகத்வம், போக்யத்வம் இரண்டும் தோளுக்கு உள்ளன என்கிறார்.

பற்பநாபன் கையிலாழி போல் மின்னி என்பதை “பற்பநாபன் போல் மின்னி” என்று சொல்லாமல் இருந்ததற்கு காரணம், வெற்றி பெற்ற எம்பெருமான், தான் ஸாதாரணமாக இருப்பினும், திருவாழியாழ்வான் மிக மின்னித் தோன்றுவான் ஆதலால் “ஆழிபோல் மின்னி” என்கிறார்.

சார்ங்கமுதைத்த சரமழைபோல்” என்றவுடனே, அந்த சார்ங்கத்துச் சரமழை ராவணாதியரை முடித்ததை போல் இதுவும் முடித்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, ‘வாழ உலகினிற் பெய்திடாய்” என்றனர்.

Leave a comment