திவ்ய பிரபந்தம்

Home

T1 மார்கழி

ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எம்பெருமான் எழுப்பி, தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார்.

மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள்.

கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம், என்ற பருவத்தில் இருந்த ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் வடபெரும்கோவில் உடையானை தழுவி முழுதாக பரிமாற வேண்டும் என்று செல்கிறாள்; அது நடக்க வில்லை; இது போல எம்பெருமானை அடைந்தவர்கள் உண்டோ என்று ஆராய்ந்து திருவாய்பாடியில், பெண்பிள்ளை இவனோடு சேர்ந்து அனுபவிக்க பெற்றார்கள் என்று அறிந்தாள். 

திருவாய்பாடியில் ஊர் பெரியவர்கள் மழை வேண்டும், என்று ஒரு காரணத்தை கொண்டு, பெண்களை மார்கழி நோன்பு நோற்க சொன்னார்கள். ஊர் பெண்கள் அதற்கு சம்மதித்தாலும், கண்ணனை பிரிந்து, ஒவ்வொரு பெண்ணும், அவரவர் வீட்டில் உறங்கி கொண்டு இருக்க, சிலர் தூங்காமல் எம்பெருமானை நினைந்து தூங்காமல் எழுந்து, ஒவ்வொரு வீடாக சென்று, தனிதனியே எழுப்பி, ஸ்ரீ நந்தகோபர் மாளிகைக்கு சென்று, கிருஷ்ணனை எழுப்பி, தங்கள் விருப்பத்தை தெரிவித்து, பரதாழ்வான் திருவடிகளில் விழுந்து வேண்டி கொண்டார் போலவும், அர்ஜுனன் போர்க்களத்தில் சரம ஸ்லோகத்தை பெற்றதை போலவும் தங்கள் ஆசை நிறைவேற பெற்றார்கள்.

ஆண்டாளும், அதே போல விரதத்தை நடத்த எண்ணி, ஸ்ரீவில்லிபுத்தூரையே திருவாய்பாடியாகவும், அங்குள்ள பெண்களையே, இடைபெண்களாகவும், தானும் அவர்களிலே ஒருத்தியாகவும், வட பெரும் கோவிலையே நந்தகோபர் திருமாளிகையாகவும், உள்ளே நிற்கிறவனை கிருஷ்ணனாகவும் நினைத்து, இவள் திருவாய்பாடியிலே குடி பெயர்ந்து வாழ்வதாக ஆனாள்.

நோன்புக்கு ஒரு காலம் தேவை படுகிறதே என்று காலத்தை கொண்டாடுகிறார்கள். முதல் மூன்று வரிகள் ப்ராயம் (அடைய வேண்டியது). இறுதி ஐந்து வரிகள் பிராபகம்(வழி). இது ப்ராப்ய, பிராபகங்களின் சங்கமம்.

திருப்பாவை 1

நாம் நோன்பு நோற்பதற்கு சரியான காலம் மார்கழி என்று அந்த மாதத்தினை கொண்டாடி, மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை அழைப்பது இந்த பாட்டு. இவர்களும் நோன்பு நோற்க வாய்த்த மார்கழி மாதத்தை நினைந்து நெஞ்சு கனிகின்றனர்

  • மார்கழித் திங்கள்” என்று கூறியது ஸத்துவகுணம் நிரம்ப பெறும் காலத்தை சொல்வது;
  • பகவத் கீதையிற் கண்ணன் “மாதங்கள் அனைத்திலும் மார்கழி மாதமாகிறேன் நான்” என்று மார்கழியின் பெருமையை சொல்கிறார்.

மதிநிறைந்த நன்னாள்” என்று சொன்னது, ஆசாரியனுடைய அருளினால், ஸ்வருப உணர்ச்சி பெற்று எம்பெருமானுடைய விஷயத்திற்கு இலக்கான நாளைக் கூறுவது.  மேலும்,

  • நற்காரியங்கள் செய்ய விரும்பினார்க்குச் சாஸ்திரங்களில் விதிக்கபட்ட சுக்லபக்ஷமும் இவர்களுக்கு நினைவிற்கு வந்ததால், அதனையும் கொண்டாடுகின்றனர்.
  • ஒருவரை ஒருவர் முகம் கண்டு அநுபவித்தற்கும், எல்லாரும் கூடிச் சென்று கண்ணபிரானை உணர்த்துவதற்கும் பாங்காக நிலா இருப்பது மகிழ்ச்சி மிக்கது என்றும் கொண்டாடுகிறார்கள்.

“குளிக்க வாருங்கள்” என்று சொல்லாமல் “நீராடப்போதுவீர்” என்று கௌரவம் தோன்ற கூறுவது, பகவத் ஸம்பந்தம் உள்ளவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவரே என்பதற்காக. மேலும்

  • நீராடப் போதுவீர்” என்று சொன்னது, ‘பகவத் ஸமாச்ரயணம் பண்ண வாருங்கள்’ என்கிறது. 
  • நெடுநாளாகக் கண்ணனைப் பிரிந்து இருந்ததால் உண்டான தாபம் முழுவதும் அடங்க, நீராட விருப்பமுடையீர் வாருங்கள் என்று அழைக்கிறார்.
  • இங்கு, நீராட என்று கூறியது, “கண்ணனோடு கலவி செய்ய” எனக் கூறியதாகும்.

அற்ப பலன்கள் பெறுவதற்கு கஷ்டமான கர்மங்கள் செய்ய வேண்டும்; மீட்சியின்றி வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் போதும், வேறு ஒருவகை அதிகாரமும் வேண்டாம் என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்களால் விளங்கும். இந்த இச்சையும் ஸாதனமாக கருதப்படுவதும் இல்லை என்பது உணரத்தக்கது.

  • மேலும்  போதுவீர் போதுமினோ என்று சொன்னது, ‘வருகிறவர்கள் எல்லாரும் வரலாம்’ என்பதை குறிக்கிறது. 
  • போதுவீர் போதுமினோ” என்று சொல்வதால், எந்தவிதமான முன் நிபந்தனைகளும், காரியங்களாக இதற்கு செய்ய வேண்டாம் என்கிறது. 

‘கண்ணன் நம்மை எப்போது அணைத்துக் கொள்ள வருவனோ’ என்று ஆய்ச்சியர்கள் அனைவரும் ஆபரணம் பூண்டு இருப்பதால், “நேரிழையீர்” என அழைக்கபட்டனர். மேலும்,

  • ‘எம்பெருமானோடு ஸம்ச்லேக்ஷிக்க வாருங்கள்’ என்று இவர்கள் விளித்தவுடனே உவப்பினால் அவர்களது மேனி ஆபரணம் பூண்டாற் போலாயிற்று என்றும் கொள்ளலாம். 
  • நேரிழையீர்” என்று சொல்வது, ஞானம் பக்தி வைராக்யம் முதலிய குணங்களே ஆத்மாவுக்கு அலங்காரமாதலால், அந்த குணம் உடைய பெண்களை இங்கே கூறுகிறது.

ஏற்கனவே பால் நெய் முதலியவற்றால் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில் திருநாட்டுத் தலைவனான கண்ணன் வந்து பிறந்ததால், “சீர்மல்குமாய்ப்பாடி” எனப்பட்டது. பரத்துவம் மட்டும் பொலிய நிற்கும் பரமபதம் போலன்றி, ஸௌசீல்ய ஸௌலப்யாதி ஸகல குணங்களும் சால விளங்குமிடம் இதுவானதால் சீர்மல்க என்று சொல்வதற்கு ஒரு குறையும் இல்லை.

செல்வச் சிறுமீர்காள்” என்று அழைக்கப்பட்டது ஏன்எனில்,

  • எம்பெருமானிடத்தில் அன்புடைமைக்கு மேற்பட்ட செல்வம், ஆத்மாவுக்கு இல்லை
  • தண்டகாரண்யவாசிகளான முனிவர்கள் இராமபிரானது ஸௌந்தர்ய அதிசயத்தில் ஈடுபட்டு, அன்பு மிகுதியால் பெண்களாக விரும்பினர். அதனால் மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையர்களாய் பிறந்து, கண்ணணைக் கூடினர்.
  • அந்யசேஷத்வமும் ஸ்வஸ்வாதந்திரியமும் இல்லாதாரைக் குறிப்பது, சிறுமீர்காள் என்பது. 

கூர்வேல் கொடும் தொழிலன் ‘ என்று சொன்னது,

  • எறும்பு முதலியவைகளுக்கு துன்பம் நேர வேண்டாம் என்று எப்போதும் நினைக்கும் நந்தகோபன்.
  • கண்ணனை மகனாகப் பெற்ற பின்பு அவனிடம் கொண்ட அதிக பாசத்தினால் கண்ணன் சயனிக்கும் தொட்டிலின் கீழ் ஓரு எறும்பு ஊர்ந்தாலும் அதனைக் கொல்வதற்கென்று எப்போதும் கூரிய வேலுடன் இருந்தான் என்பதை குறிக்க என்று கொள்ளலாம்.

உலகில் குழந்தைகள் தந்தையிடம் அஞ்சி இருப்பதும், தாயிடம் அடங்காது இருப்பதும் போல கண்ணனும் நந்தகோபனுக்குக் கீழ் கன்றாகவும், யசோதைக்குச் சிங்கமாகவும் இருந்ததால் “நந்தகோபன் குமரன்,” என்றும் “யசோதை இளஞ்சிங்கம்” என்றும் கூறுகிறார்.

கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அழகுமிகுந்து தோன்றியதால் “ஏரார்ந்த கண்ணி” என்ற அடைமொழி கொடுக்கப் பட்டது.

கண்ணனது திருமேனியைக் கண்டதுமே கார்முகிலை கண்டது போல, ஸகல தாபங்களும் தீர்வதால் “கார்மேனி” என்கிறார்.

கண்ணனின் திருமுக மண்டலத்தின் ஒளிக்குக் கதிரவனும், குளிர்ச்சிக்குத் திங்களும் உவமை என்று சொல்லி, அப்படிப்பட்ட அழகு பொருந்தியவன், நமக்கு நாயகனான நாராயணனே என்கிறார். அடியார்க்கு அணுக தக்கவனாகவும், அல்லாதார்க்கு கிட்ட முடியாதவனாகவும் எம்பெருமான் என்பதை “கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது விளக்கும். அந்த எம்பெருமான் அல்லாமல் மற்றவரிடம், யாம் எதுவும், வேண்ட மாட்டோம் என்கிறார்.

நாராயணன், அடியார்க்குக் காரியம் செய்யும் போது, எந்த வித சாதனங்களையும் எதிர்பாராது செய்து முடிப்பவன் என்பதை சொல்வதற்கு நாராயணனே என்று ஏகாரத்துடன் சேர்த்து சொல்கிறார்.

நமக்கே என்ற இடத்திலும், ஏகாரம், நாராயணன் ஸ்வாமியாயினும், ஆகிஞ்சந்யம் (மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது), அநந்யகதித்வம் (உன்னை அல்லால்  எனக்கு வேறு ஒருவரும் இல்லை) என்னும் அதிகாரங்கள் கொண்ட நம்மைத் தவிர வேறு யாருக்கும் காரியம் செய்ய மாட்டான் என்பதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமான ஒரு வாத்ய விசேஷம். பறை, பறை என்று சொல்லிக் கொண்டு போவது தங்களுடைய கைங்கரிய விருப்பத்தை தெரிவிக்கவே. அந்த கைங்கரியத்தைத் தாமாகவே செய்ய இவர்களுக்கு பிராப்தி இருந்தாலும், எம்பெருமானின் நியமனம் கொண்டு செய்வதே தகும் என்பதை “பறை தருவான்” என்பதனால் சொல்கிறார்.

நெடுநாள் பிரிந்து இருந்த கண்ணனையும் ஆயர்மங்கைகளையும் இன்று சேர்த்தது மழை பெய்விக்க வேண்டும் என்ற காரணத்தை கொண்ட நோன்பினால் என்பது விளங்கும். அப்படி மழை பெய்து புகழ் உண்டாக வேண்டும் என்ற விருப்பதை பாரோர் புகழ அல்லது மகிழ என்கிறார்.

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்களை கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறைபொருள். 

Leave a comment